ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அய்யனார் குளத்தில் அரிகேசவ வழிவிட்ட அய்யனார் கருவறையில் மேற்கு நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் தடை தகரும். முயற்சியில் வெற்றி பெறும் அளவு வல்லமை உண்டாகும். தல வரலாறு: அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் விதமாக இத்தலத்தில் அரிகேசவ அய்யனார் எழுந்தருளிஇருக்கிறார். ஆதிகாலத்தில் இங்கிருந்த இலந்தை மரத்தின் வேரில் அரூப வடிவில் (உருவமற்ற நிலை) அய்யனார் தங்கி இருந்தார். இவ்வூர் அருகிலுள்ள இடைச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் தினமும் இவ்வழியாக செல்வது வழக்கம். தினமும் இலந்தை மரவேரின் மீது அவரது கால் தடுக்கி, பால் கொட்டுவது வாடிக்கையாக இருந்தது. நடைபாதையில் இடையூறாக இருந்த வேரை, வியாபாரி கோடரியால் பிளக்க, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்ட வியாபாரியின் பார்வை பறி போனது. அங்கு அய்யனார் குடிகொண்டிருப்பதை அறிந்த ஊரார், கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். இலந்தை மரம் இருந்த இடம் 'ருத்ராயணம்' என அழைக்கப்படுகிறது. தம்பிகள் இருவர்: அரிகேசவ அய்யனாருக்கு கழுகுமலை கிழவன் என்றும் பெயருண்டு. தேவர்களைக் காக்கும் விதத்தில் மேற்கு நோக்கியிருக்கும் இவர், அசுர சக்தியை அடக்கியுள்ளார். இவருக்கு கழுகுமலை அய்யனார், நிறைகுளத்து அய்யனார் என இரு தம்பியர் உள்ளனர். கழுகுமலை அய்யனார் புதுக்கோட்டை பகுதியிலும், நிறைகுளத்து அய்யனார் ராமநாதபுரம் பகுதியிலும் கோவில் கொண்டுள்ளனர். 109 பெயர்: 285 எக்டேர் பரப்புள்ள வயல்வெளி நடுவில் இந்தக்கோவில் உள்ளது. கருவறையில் பூர்ண புஷ்கலா தேவியருடன் அய்யனார் உள்ளார். இந்த அய்யனாருக்குரிய அஷ்டோத்ர நாமாவளியில் 108க்கு ஒன்று கூடுதலாக 109 திருநாமம் (பெயர்) உள்ளது. கருவறை முன் விநாயகர் வீற்றிருக்கிறார். அய்யனார் சன்னிதிக்கு இடதுபுறமுள்ள தெப்பக்குளத்தின் நடுவே தீர்த்தக் கிணறு உள்ளது. திருமணம், குழந்தை பாக்கியம் பெறவும், கடன், நோய் தீரவும் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், திரியாட்டு, மாவிளக்கு, கரும்பாலை தொட்டில் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். வலம்புளி கருப்பணசாமி : அய்யனார் சன்னிதிக்கு வலப்புறத்தில் 600 ஆண்டு பழமை மிக்க புளிய மரம் உள்ளது. இந்த மரத்தின் கிளை வலப்புறமாக முறுக்கி, திருகியுள்ள இடத்தில் கருப்பணசாமி வீற்றிருக்கிறார். இவர் வலம்புளி கருப்பணசாமி எனப்படுகிறார். திருவிழா: மாசி சிவராத்திரியில் பாரி வேட்டை, மறுநாள் சமண மகா மாமுனிவர், மாசான காளி பூஜை, புரட்டாசி மகாளயம், தை பொங்கல், பங்குனி உத்திரம் இருப்பிடம் : மதுரையில் இருந்து கமுதி 87 கி.மீ., இங்கிருந்து அருப்புக்கோட்டை சாலையில் 2 கி.மீ., தூரத்தில் கோவில். நேரம் : கோவில் எப்போதும் திறந்திருக்கும். காலை 6:00 - 6:30 மணி வரை மட்டும் சுத்தப்படுத்த நடை சாத்தப்படும். அலைபேசி: 98429 95736, 97502 46368.